ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு சதவிகிதம் ஒரே மாதிரியாக கொண்டு வரவும்,
பிற பாடங்களை 75 சதவிகிதம் ஒரே மாதிரியாக கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பாகத்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களையும் தன்னுடைய ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தேசிய கல்வி கொள்கை மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான அவசியம் குறித்தும் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த நிலையில், ஆளுநருக்கு அடுத்தபடியாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து பேசுவது போட்டிபோடுவது போல் அனைவருக்கும் தோன்றுகிறது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து பேசுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி- க்கும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் இடையில் சில நாட்களாகவே உரசல்கள் ஏற்படுவதாக தகவல் வெளிவந்ததை அடுத்து தற்போது அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு மிகுந்த வேகத்துடன் பொன்முடி செயல்பட்டு வருகிறார்.