ராஜஸ்தான் அணியை புரட்டிப்போட்ட மும்பை அணி அபார வெற்றி.!!

0
208

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இதனால் ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 50 ரன்னுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 90 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில், மும்பை அணி சார்பில் கோல்ட்டர் நைல் 4 விக்கெட்களையும், நீசம் 3 விக்கெட்களையும், பும்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதைத்தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷன் கிஷன் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவித்தனர். இதில் ரோகித் சர்மா 22 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹார்திக் பாண்டியா, இஷன் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இதில், அதிரடியாக விளையாடிய இஷன் கிஷன் அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் மும்பை அணி ௮.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருந்த மும்பை அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.