Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறது.

கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பிரான்ஸ், பெலாரஸ், சுலோவேனியா, மால்டோவா, எகிப்து, சுவீடன், ஹங்கேரி, சீனா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன.

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறது. ஓபன், பெண்கள், ஜூனியர் ஓபன், ஜூனியர் பெண்கள் ஆகிய 4 பிரிவுகளில் பந்தயங்கள் நடக்கிறது. இந்திய அணியில் ஆனந்த், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அதிபன், கோனேரு ஹம்பி, ஹரிகா, தானியா சச்தேவ், ஆர்.வைஷாலி, நிஹால் சரின், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த போட்டி குறித்து ஆனந்த் கூறுகையில், ‘அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் சரியான கலவையாக இந்திய அணி உள்ளது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்று நம்புகிறோம்’ என்றார்.

Exit mobile version