Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராஜஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்!

மும்பை வான்கடே மைதானத்தில் நான்காவது ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,  பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மயங்க் அகர்வால் 14 ரன்னிலும் கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை அடுத்து வந்த தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி,  6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார்.

 

இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.  ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் களமிறங்கினர்.

முதல் ஓவரின் 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார். மனன் வோரா 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.  இதை அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சற்று நிதானமாக ஆடினார். ஜோஸ் பட்லர், ஷிவம் டூபே ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர். பட்லர் 25 ரன்னிலும், ஷிவம் டூபே 23 ரன்னிலும் வெளியேறினர். ரியான் பராக் 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்தார். இருந்த போதிலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது. இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 119 ரன்னில் கடைசி பந்தில் அவுட்டானதால் அந்த அணி வெற்றியை எட்டமுடியாமல் போனது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Exit mobile version