9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
கிரிக்கெட் மீதுள்ள அதீத ஆர்வத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான அணி களுக்கு தேவையான வீரர்களின் ஏலம் மற்றும் அணி வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது நடந்த வருகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் போட்டி தொடருக்கான ராஜஸ்தான் அணியில் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிய வீரரை அந்த அணி நீக்கியுள்ளது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது வருடங்களாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரகானே இந்த வருட 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி விலைக்கு வாங்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் ரஹானே எடுக்கப்பட்டார். தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் வெளியேறிய பின் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டார்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வருவதால் கடந்த ஆண்டு ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்பிய பின் ரஹானேவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் ஸ்மித்திடமே அளிக்கப்பட்டது. இதனால், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் ரஹானே சிறிது மன வருத்தத்துடன் காணப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே ஏற்கனவே சிறப்பான இளம் வீரர்களை கொண்டுள்ள டெல்லி அணிக்கு செல்வதால் மேலும் அந்த அணியின் பேட்டிங் பலப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்காக மாறி அந்த அணிக்காக கேப்டன் செய்யவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையிலும் மற்றும் ஆலோசகர் சவுரவ் கங்குலி தலைமையிலும் அந்த அணி மெருகேறி வருகிறது. கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே டெல்லி அணியில் ஷிகர் தவண், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமார விஹாரி, ரிஷப் பந்த் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கும் நடுவரிசையை பலப்படுத்த ரஹானே இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என கங்குலி அளித்த ஆலோசனையை ஏற்று ரஹானே டெல்லி அணிக்கு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 3,820 ரன்களைச் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 121 ஆகவும் சராசரியாக 32 ரன்களும் வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.