நமக்கென்று சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை வாங்க வேண்டும், எந்த ஒரு கடனும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும், என்பதே இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானோரின் கனவு. அதற்காக ஓடி ஓடி உழைப்பார்கள், சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களது கனவை நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையையும் அவர்களுக்கு அமையாது. அதற்கு பலவிதமான காரணங்கள் ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது.
எவரது வம்சத்திற்கு அதிகமான சாபங்களும், பித்ரு தோஷங்களும் உள்ளதோ, அவர்களால் தான் சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை வாங்க முடியாது என்று ஜோதிடம் கூறுகிறது. இவற்றுள் பித்ரு தோஷம் என்பதில் பல வகைகள் உள்ளன. நமது குடும்பத்திற்கு வேண்டும் என்பதற்காக மற்றவர்களை ஏமாற்றி நிலங்களை அபகரித்தால், அவருடைய சொத்து என்பது அடுத்த வம்சத்திற்கு கண்டிப்பாக போகாது.
புற்று இருக்கக்கூடிய இடத்தில் அதனை அழித்துவிட்டு, எந்த ஒரு பரிகாரங்களும் செய்யாமல் வீட்டினை கட்டினால், அதுவும் ஒரு தோஷமாக மாறிவிடும். சர்ப்பங்களின் சாபம் இல்லாமல் நாம் பார்த்து வீடு மற்றும் நிலங்களை வாங்குவது நல்லது. புற்று இருக்கக்கூடிய இடத்தில் பரிகாரம் எதுவும் செய்யாமல் வீட்டினை கட்டினால் அது நிலைக்காது.
நாம் ஒரு நிலம் வாங்கினால் அந்த நிலத்தில் உள்ள மரங்களை அழித்துவிட்டு தான் வீட்டினை கட்டுவோம். அப்பொழுது அந்த மரத்தில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்பட்டால் அது பட்சிகளின் சாபமாக மாறிவிடும். அந்த மரத்தில் கூடு கட்டி வாழக்கூடிய பறவைகளின் வாழ்க்கையை நாம் உடைத்து விட்டால், நமது வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது.
இவ்வாறு நமது வம்சத்தில் உள்ள முன்னோர்கள் யாரேனும் இந்த தோஷங்களையும், பாவங்களையும் செய்து இருந்தால், அது நம்மை தான் பாதிக்கும். இந்த தோஷங்கள் இருப்பது நமது ஜாதகத்தின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு பாவங்களை செய்தால் நமது சொத்தானது அடுத்த தலைமுறைக்கு போகாது. அதே சமயம் அடுத்த தலைமுறையினரால் எந்த ஒரு சொத்தும் வாங்கவும் முடியாது.
ஒரு நல்ல வீடு நமக்கு அமைய வேண்டும். அதில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படக் கூடாது என்றால் முதலில் பூமிநாதரை தான் நாம் வழிபட வேண்டும். அதேபோன்று வராஹ பெருமாளையும், வாராகி அம்மனையும் வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் இந்த கடவுள்களை நினைத்து நாம் வழிபட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நமது ஜாதகத்தில் உள்ள குறைகளை காட்டிலும், கர்ம தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்வது தான் முக்கியம்.
அதேபோன்று ஒருவரது ஜாதகத்தை பார்த்தாலே, இவர்களால் கடன் வாங்கினால் கண்டிப்பாக அதனை செலுத்த முடியாது என்பதை கூறிவிடலாம். ஏனென்றால் கிரக நிலைகள் அவ்வாறு இருக்கும். ஒரு சிலர் கடன் வாங்கினால் அதனை சுபச் செலவுகளுக்காக என வாங்குவர் அவர்களால் அதனை திருப்பிக் கொடுத்து விட முடியும். ஆனால் ஒரு சிலர் நகைகளை அடகு வைத்து விட்டு அதனை மீட்கவே முடியாமல் இருப்பர்.
என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களால் அந்த கடனை அடைக்கவே முடியாது. இவ்வாறு இருப்பவர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டு இருப்பர். எனவே அதனை கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கான இந்த நிலைமை மாறும்.
ஒருவரது ஜாதகத்தில் ராகு புத்தி, புதன் திசை அல்லது புதன் புத்தி, ராகு திசை என்பவை நடக்கும் பொழுது அவர்கள் சற்று பணம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த திசை நடக்கும் பொழுது நம்மை கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு அல்லது இழப்பு ஏற்படக்கூடிய இடத்தில் முதலீடு செய்வதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்து விடும். இந்த நேரங்களில் நம்மால் கண்டிப்பாக வாங்கிய கடனை அடைக்க முடியாது.