“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

0
126

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது.

2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நேற்று முதல் தொடங்கியுள்ளன.

இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் போனது.

கடந்த ஒரு ஆண்டில் இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ள நிலையில் அதில் பாகிஸ்தான் அணி 2 முறையும், இந்திய அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் “ இந்திய அணியை உலகக்கோப்பையில் பாகிஸ்தானால் வெல்லவே முடியாது என்பதை எல்லாம் இப்போது பாகிஸ்தான் அணி மாற்றிவிட்டது. கடந்த 3 போட்டிகளில் நாங்கள் இரண்டு முறை வென்றுள்ளோம். எனவே இரு அணிகளும் இப்போது சமபலத்துடன்தான் உள்ளது. அதனால் எங்களை அவர்கள் எளிதாக எண்ண மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.