இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட உள்ளது. இதில் முதல் போட்டியானது இந்த மாதம் 16 முதல் 20 வரை நடைபெற இருந்தது ஆனால் தொடர் மழை காரணமாக முதல் நாள் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யும்போது சர்ப்ராஸ் கான் பீல்டிங் செய்யும் தனது நிலையில் இருந்து தள்ளி போனதால் பந்து பவுண்டரி சென்றது. கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் கடினமாக சர்ப்ராஸ் கானை களத்திலேயே கடிந்து கொண்டார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர சிறப்பாக விளையாடி 157 பந்துகளுக்கு 134 ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். டெவான் கான்வே 91 ரன்கள் எடுத்து சதம் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். டிம் சவுதி 65 ரன்கள் எடுத்தார். ரவீந்தர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனார். விராட் கோலி மற்றும் சர்ப்ராஸ் கான் ஜோடி 100 ரன்களை கடந்தது விராட் கோலி 70 ரன்களில் அவுட் ஆனார். இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் களத்தில் அதிரடியாக ஆடி ரோஹித் சர்மாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்ப்ராஸ் கான் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதத்தை பதிவு செய்தார். இவர் 154 பந்துகளில் 125 ரன்கள் அடித்துள்ளார். அணியின் எண்ணிக்கை 344/3 என்ற எண்ணிக்கையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின் மீண்டும் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.