அணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் தலைவலி இல்லை ; மனம் திறந்த ஷிகார் தவான் !
சில மாதங்களாக இந்திய அணியில் தொடக்க ஜோடியாக யார் யாரை இறக்குவது என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் ஷிகார் தவான், கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய 3 பேரும் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேருமே சிறப்பாக விளையாடுவதால் எந்த இருவரை அணியில் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இதனால் சுழற்சி முறையில் தொடக்க ஆட்டக்காரர்களை இறக்கி வருகிறார் கேப்டன் கோலி. சமீபத்திய இலங்கைக்கு எதிரான தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அடுத்து வரும் நியுசிலாந்து தொடர் மற்றும் டி 20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பார்ம் அவுட்டில் இருந்த ஷிகார் தவான், இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தார். அதனால் அனுபவம் வாய்ந்த அவரை நீக்க முடியாத சூழல் உள்ளது. இதுபற்றி சமீபத்தில் பேசிய ஷிகார் தவான் ‘ நாங்கள் மூவரும் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகிறோம்.
கடந்த சில தொடர்களாக ராகுல் நன்றாக விளையாடுகிறார். நானும், எனக்குக் கொடுத்த வாய்ப்பையும் நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளேன். எனவே நான் இருப்பேனா அல்லது இல்லையா என்பதெல்லாம் என் தலைவலி அல்ல. அது என் கையில் இல்லாததால் எனக்கு அதுபற்றி யோசனை இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.