26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்…
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனின்டு ஹசரங்கா அவர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
26 வயதான வனின்டு ஹசரங்கா அவர்கள் 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இறுதியாக வங்கதேசத்துடன் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
மொத்தமாக 4 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வனின்டு ஹசரங்கா அவர்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். 4 போட்டிகளில் விளையாடி 196 ரன்களும் 4 விக்கெட்டுகளையும் ஹசரங்கா எடுத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து வனின்டு ஹசரங்கா அவர்கள் “வெள்ளைபந்து கிரிக்கெட்டான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக வருடம் நான் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கின்றது. எனவே நான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் வனின்டு ஹசரங்கா அவர்களின் ஓய்வு முடிவு குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆஷ்லி டி சில்வா அவர்கள் “நாங்கள் வனின்டு ஹசரங்கா அவர்களின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். மேலும் எங்களுடைய வெள்ளை பந்து திட்டத்தில் வனின்டு ஹசரங்கா அவர்கள் முக்கிய அங்கமாக இருப்பார் என்பதில் நாங்கள் உறுதி அளிக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.