கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

0
230

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.

21 நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தன்னுடைய அசாதாரணமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஸ்டெய்ன் மின்னல் வேக பந்து வீச்சு பரபரப்பாக பேசப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை ஸ்டெய்ன் வெளிப்படுத்தி வந்தார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு வெள்ளை நிற பந்து போட்டிகளில் கவனம் செலுத்திவந்த ஸ்டெய்ன், உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் டி20 தொடர்களிலும் பங்கேற்று வந்தார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,டெக்கன் சார்ஜர்ஸ் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் பங்கேற்று உள்ளார். களத்தில் எப்போதுமே ஆக்ரோஷமாக காணப்படும் ஸ்டெய்ன் களத்திற்கு வெளியேயும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசுபவர்.
தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போலவே ஸ்டெய்னும் பலமுறை காயங்களால் அவதியுற்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் மீண்டு வரும்பொழுதும் தன்னுடைய பழைய வேகத்திலேயே பந்து வீசி அனைவரையும் அசர வைத்தார். 125 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 196 விக்கெட்டுகளும், 47 t20 போட்டிகளில் பங்கேற்று 64 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
ஓய்வு குறித்து உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்டெய்ன் தன்னுடைய குடும்பம், அணி வீரர்கள், பத்திரிக்கையாளர்கள், விசிறிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.