சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு!
தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளில் முக்கியமாக, “எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலரால் ரன்-அவுட் செய்யப்படுவது உண்டு. இது ‘மன்கட்’ என்று அழைக்கப்படுகிறது.” இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இவ்வாறு ரன்-அவுட் செய்வது முன்பு நேர்மையற்ற ஆட்டம் என்ற பிரிவில் விதிமுறை 41-ல் இடம் பெற்றிருந்தது. அது தற்போது ரன்-அவுட் என்ற விதிமுறை 38-க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் இத்தகைய முறையில் அவுட் செய்யும் போது அதிகாரபூர்வமாக ரன்-அவுட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தற்போதுவரை, பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, அதற்குள் எதிர்முனையில் நிற்கும் வீரர் பேட்டிங் முனைக்கு ஓடி விட்டால் அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார். இனி அதற்கு வாய்ப்பில்லை. பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, புதிதாக களம் இறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். ஓவரில் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் இந்த விதிமுறை பொருந்தாது. இதுபோல் இன்னும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மன்கட் முறையில் ரன்-அவுட் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொறுத்தவரை அது எப்போதுமே ரன்-அவுட் தான். எனவே இது எல்லோருக்கும் நல்ல செய்தி’ என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் ஒரு பேட்ஸ்மேன் ‘கேட்ச்’ ஆகும் போது, அடுத்து இறங்கும் வீரர் தான் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் நியாயமான விதி முறையாகும். ஏனெனில் ஒரு பவுலர் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்துவதற்கு நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், புதிய பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவதே சரியானது’ இவ்வாறு தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.