Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

#image_title

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டசபையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.  2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

மேலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறுமா என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும். இதுவரை தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளுக்கு மறுநாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் 20ம் தேதி பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பிறகு மறுநாள் 21ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என சபாநாயகர் கூறினார்.

2 பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 22ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு வருவதால் அன்று விடுமுறை. இந்த 2 பட்ஜெட்கள் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் மார்ச் 23, 24, 27ம் தேதிகளில் நடத்தப்பட்டு 27ம் தேதி நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 28ம் தேதி முன்பண மானியக் கோரிக்கையையும், கடந்த ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானியக் கோரிக்கையையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். அதோடு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்று சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 

Exit mobile version