‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எளிதில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் தொடர்ச்சியாக 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அன்னா லினா பிராட்சாமை வீழ்த்தினார். உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், இந்த போட்டிக்குரிய தரநிலையில் முதலிடத்தில் உள்ளவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 1-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் 50-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.