அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி 

0
433
The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல் அதிகமாகி வந்தது. ஆரம்பத்தில் ஓபிஎஸ் மூலமாக காய் நகர்த்திய பாஜக ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் வேட்பாளரை வாபஸ் பெற வைத்து அவரையும் கிடப்பில் போட்டது. இதை கவனித்து வந்த அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து வந்தனர். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக இப்படியெல்லாம் பண்ணலாமா என தலைமையிடம் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதை கவனித்த அக்கட்சியினர் கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக செய்வது சரியல்ல என்று விமர்சித்தனர். இதனால் அதிமுக – பாஜக தலைவர்களிடையே அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜகவினரின் விமர்சனத்திற்கு அதிமுக தலைவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வருமா என்ற வகையிலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், பாஜகவிலிருந்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அதிர்ச்சியாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதிமுக பாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறது என்ற விமர்சனம் தமிழ்நாட்டில் வலுவாக இருக்கிறது. அதனை விசிகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தற்போது பாஜகவிலிருந்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அரசியல் தலைகீழாக நடக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

ஆனாலும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளிடையேயான இந்த மோதல் தற்காலிகமானது தான். மேலும் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக சேர்ந்து தான் போட்டியிடும். இந்த கூட்டணி குறித்து டெல்லியில் இருந்து தான் முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. எனவே தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பினால் எதோ மாற்றம் நிகழ போகிறது, ஆனால் அதிமுக தனித்து போட்டியிட போகிறது என்று நாம் எண்ணிவிட முடியாது என்று அவர்  தெரிவித்தார்.