Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள அனைத்து அணிகளும் அவர்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்தன. அதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டார்கள்.

அந்த வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த 1214 வீரர்களில் 590 பேர் மட்டுமே இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

இந்த மெகா ஏலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், இளம் வீரருமான தீபக் ஹூடாவும் பங்கேற்கவுள்ளார். தற்போது நடைபெற உள்ள  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த வகையில், எனக்கு ஐபிஎல்-ல் இந்த அணிக்காகத்தான் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இருப்பினும், ஐபிஎல்-ல் எனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தோனி தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை எனத் தெரிவித்துள்ளார். மேலும், நான் தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவரது கேப்டன்ஸி, தலைமை பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவருடன் பலமுறை பேசியிருக்கிறேன். தோனியின் அமைதியான நடத்தை மற்றும் அணுகுமுறை அவரை சக வீரர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியதாகவும்  ஹூடா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version