ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் விராட் கோலி,ரோஹித் சர்மா மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் தான்.அவர்கள் எடுத்த ரன்களின் எண்ணிக்கை விவரம்:
1. விராட் கோலி – 1292 ரன்கள்
2. ரோஹித் சர்மா – 1268 ரன்கள்
3. ஷாய் ஹோப் – 1225 ரன்கள்
இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடா்களில் பங்கேற்பதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் அந்த தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் தற்போது ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக நடைபெறவுள்ள 2 வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் ஷாய் ஹோப் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
ஒரு பேட்ஸ்மேனாக, தன்னுடைய அணியின் வெற்றிக்கு ரன்கள் எடுப்பதில் தான் திருப்தி அடங்கியுள்ளது. அதே சமயம், ஏற்கனவே உள்ள இருவரையும் சீக்கிரம் வீழ்த்தி விட்டு, அதிக ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான இந்த வருடப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷாய் ஹோப் 102 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ள விசாகப்பட்டினம் ஆடுகளம் குறித்து ஷாய் ஹோப் கூறியதாவது: இந்த மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளமாக உள்ளது. பந்தை எளிதில் அடித்து ஆட முடியும். எதிர்பார்த்தவாறு ரன்கள் எடுக்கச் சுலபமாக இருக்கும் என்பதால் பந்து வீச்சாளர்களுக்குச் இந்த மைதானம் சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.