பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பதுதான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு.
ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
மேலும் பங்குனி உத்திரம் அன்று மகாலட்சுமி அவதரித்த தினமாக கருதப்படுகிறது.
பங்குனி உத்திர நாளில் தான் உலகின் தலைசிறந்த வேல் வீரனாக கருதப்படும் அர்ஜுனன் அவதரித்தான் என்றும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, சிவபெருமானுக்கும் விஷ்ணு மாயாவுக்கும் பிறந்த சாஸ்தா, ஐயப்பன் பங்குனி உத்திர நாளில் தான் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனை காதலித்து திருமணம் செய்த வள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம். பங்குனி உத்திரம் அன்று தான் தெய்வங்களின் திருமணம் நடந்தது.
2025-ம் ஆண்டின் பங்குனி உத்திரம் எப்போது?:
2025 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 10 ஆம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்திற்கு தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணி 10 நிமிடத்திற்கு முடிவடைகிறது.வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
2025 பங்குனி உட்சத்திரம் வரும் நாள் அன்று கன்னி ராசியில் இருக்கும் கேது உடன் சந்திரன் இணைகிறார். ராகு கேது பெயர்ச்சி, மே மாதம் நடைபெறுவதால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று கேது உடன் சந்திரன் இணைகிறார்.
பங்குனி உத்திரம் புராணக்கதை:
சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகு செய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.