தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

0
209

தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் மார்ச் 29 ஆம் தேதி ஐசிசியின் உயர்மட்ட குழுவின் கூட்டம் நடைபெற  இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐசிசி யின் யர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கூட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது.

இதனால் கங்குலிக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இல்லாவிட்டால் அவர் ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகும். ஒருவேளை ஐபிஎல் தொடக்க விழா மட்டும் முன்னதாகவே நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.