தமிழகத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் லீக்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
தமிழகத்தில் ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் மாதிரியே பெண்களுக்கும் பெண்கள் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. திறமையான வீராங்கனைகளை கண்டறிய 4 குழுக்கள் அமைத்துள்ளதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் இருக்கின்றது. அவை அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமே இருக்கின்றது. அதைப் போல தமிழ்நாட்டில் ஆண்களுக்கு என்று தமிழ்நாடு பிரீமியர் லீக் உள்ளது. இந்த தொடர் மூலம் திறமையான வீரர்கள் கண்டறியப்படுகின்றனர். ஆனால் பெண்களுக்கு என்று உள்ளூர் லீக் போட்டிகள் இல்லாததால் பல வீராங்கனைகளின் திறமை வீணடிக்கப்படுகிறது. எனவே இந்த திறமையை கண்டறிந்து பல வீராங்கனைகளை கொண்டு வருவதற்கு பெண்களுக்கும் பெண்கள் டி20 லீக் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
திறமையான வீராங்கனைகளை கண்டறிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தனியாக 4 குழுக்களை அமைத்துள்ளது. மே மாதம் 13, 14, 17, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இந்த குழுக்கள் தமிழகத்தில் 37 மாவடங்களிலும் வீராங்கனைகளை கண்டறிய முகாம் நடத்தவுள்ளது.
இந்த குழு தமிழகத்தில 13 வயதிற்கு மேற்பட்ட திறமையுள்ள பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு பேட்டிங், பவுலிங் பயிற்சி கொடுக்கவுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்று பெண்கள் டி20 பிரீமியர் லீக் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.