நாம் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் முறைகளில் உள்ள வகைகளுள் ஒன்று தான் அர்ச்சனை. நாமங்களினால் இறைவனை நாம் பாடி வழிபடும் முறை தான் அர்ச்சனை. அதனை அர்ச்சித்தல் என்றும் கூறுவர். கோவிலில் இருக்கக்கூடிய அந்த தெய்வத்திடம் நாம் நமது எண்ணங்களை மற்றும் நமது மனதில் இருக்கக்கூடிய பிரார்த்தனைகளை விண்ணப்பம் செய்து, அவரிடத்திலே தெரிவித்து வழிபடக்கூடிய இந்த வழிபாட்டு முறையில் நமது பெயரினை கூறி அர்ச்சனை செய்ய வேண்டுமா? அல்லது கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
ஒரு சிலர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் பொழுது அவரது பெயர், அவரது குடும்பத்தில் உள்ள பெயர் என அடுக்கிக்கொண்டே செல்வார்கள். இன்னும் சிலர் சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்று எளிமையாக கூறி விடுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு பெயர் மற்றும் நட்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்வது ‘கடவுளாகிய உன்னை காண நான் வந்துள்ளேன்’ என கூறுவதற்காக நமது பெயரை சொல்லி நாம் அர்ச்சனை செய்கிறோம். இதனால் நாம் கூறக்கூடிய பெயர்களுக்கு கடவுளின் அனுகூலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆனால் கடவுளின் பெயருக்கு அர்ச்சனை செய்யும் பொழுது கடவுளின் சக்தி மென்மேலும் அதிகரிக்கும். நமது பெயரில் அர்ச்சனை செய்யும் பொழுது நாம் மட்டும் நன்றாக இருப்போம். அதுவே கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்யும் பொழுது அவரது சக்தியினால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருப்பார்கள். நமக்கு தேவைகள் இருக்கிறது அல்லது வேண்டுதல்கள் இருக்கிறது என்கின்ற பொழுது நமது பெயரினை கூறியே அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
நம் அனைவருக்கும் நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் காரணம் அந்த இறைவன்தான். எனவே அவர் நன்றாக இருந்தால் போதும் என்று பக்குவம் உடையவர்கள் தெய்வத்தின் பெயரிலேயே அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறி விடுவார்கள். எனவே நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா? அல்லது கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா? என்ற கேள்வி வரும் பொழுது, அவரவர் தேவைக்கு ஏற்ப எந்த முறையில் வேண்டுமானாலும் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
ஆனால் நமக்கு என்ன வேண்டும், நமக்கு என்ன தேவைப்படும் என்ற அனைத்தையும் அறிந்தவர் அந்த கடவுள். எனவே பக்குவ ஆன்மாவை கொண்டவர்கள் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து அர்ச்சனை செய்யாமல் ‘எனக்கு என்ன கொடுக்கிறாயோ அதனை கொடு போதும்’ என்று கடவுளின் பெயரிலேயே அர்ச்சனை செய்து விடுவார்கள்.
அர்ச்சனை செய்வது என்பது முக்கியமான ஒன்றுதான் ஆனால் ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சரி இல்லை அல்லது ஒருவருக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்கின்ற பொழுது அவரின் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். மற்ற சமயங்களில் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வது நமக்கும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் நல்லது.