முருகனின் உயர்ந்த நாமங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் “ஓம் சரவண பவ” என்ற நாமம். மூல மந்திரமாக உச்சரிக்கக் கூடிய இந்த நாமத்திற்கு பல்வேறு சிறப்புகளும், பொருள்களும் உண்டு. சரவணப் பொய்கையில் முருகன் அவதரித்ததால் சரவணன் என்று பெயர் அவருக்கு வந்தது. சரம் என்றால் ‘தர்ப்பை’ வனம் என்றால் ‘காடு’.சரவண – தர்ப்பை காடு என்று பொருள்.
அத்தகைய தர்ப்பை காட்டில் இயற்கையாக தோன்றிய நீர் நிலையத்தில் அவர் தோன்றியதனால், அந்த நீர் நிலையத்திற்கு ‘சரவண பொய்கை’ என்றும் அதில் அவதரித்த முருகருக்கு ‘சரவணன்’ என்ற பெயரும் வந்தது.
இந்தப் பெயரைக் கொண்டுதான் “ஓம் சரவண பவ” என்ற அழகான நாமமும் முருகனுக்கு உச்சரிக்கப்படுகிறது. பலவிதமான நாமங்கள் முருகனுக்கு இருந்தாலும் கூட, இந்த ஒரு நாமத்தை நாம் உச்சரிப்பதினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? அதனை எவ்வாறு உச்சரிக்க வேண்டும்? என்பது குறித்து தற்போது காண்போம்.
பொதுவாக இந்த “ஓம் சரவண பவ” என்ற நாமம் ஒரு அருங்கோணம் அமைப்பாக அமையும். இந்த அருங்கோணம் அமைப்பில் “ஓம் சரவணபவ என்பதில் இருந்து” ஒவ்வொரு எழுத்தாக நாம் பொருத்தி பார்த்தோம் என்றால் அது ஒரு எந்திரமாக நமக்கு கிடைக்கும்.
இந்த நாமத்தை நாம் கூறும் பொழுது எந்திர சக்தியை, மந்திர சக்தியாக மாற்றி நமக்கு தரும். எனவே இந்த நாமத்தை எந்திர வடிவில் வைத்து வழிபட்டோம் என்றால் அதற்கான சரியான வழிபாடுகளை நாம் கொடுக்க வேண்டும். மாறாக மனதில் நினைத்துக் கொண்டும்,அதாவது நம் மனதில் அந்த மந்திரத்தை எந்திரமாக மாற்றி வைத்து மனதார வேண்டிக் கொண்டோம் என்றாலும் அந்த எந்திரத்திற்கான சக்தி நமக்கு கண்டிப்பாகக் கிடைக்கும்.
“ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களும் ஒவ்வொரு விதமான பொருளையும், சக்தியையும் கொண்டது.
ச -செல்வத்தையும், மங்கலத்தையும் குறிக்கிறது
ர -கல்வியையும், ஒளித்தன்மை நிறைந்தவர் என்பதையும் குறிக்கும்
வ -முக்தியையும், சாத்வீகத் தன்மையையும் பெற்று தரும்
ண-பகையை வெல்லும் திறனை ஏற்படுத்தும்
ப -எம பயத்தை நீக்கும், முருகனின் அருளைத் தரும்
வ -ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக்கூடிய ஒன்று
இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்க தொடங்க வேண்டும், முருகனின் அருளைப் பெற வேண்டும் என நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இதனை தொடங்கலாம்.
செவ்வாய்க்கிழமையில் அதிகாலையில் குளித்துவிட்டு, நெய் தீபம் ஒன்றை முருகனுக்கு ஏற்றிவிட்டு முருகனுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி, செம்பருத்தி இது போன்ற பூக்களை சூட்டி விட்டு 108 முறை இந்த “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை நம் மனதார கூற வேண்டும்.
இவ்வாறு கூறிய பிறகு அந்த முருகனையே நமது குருவாக நினைத்து ‘முருகப்பெருமானே எனக்கு வேண்டிய அனைத்தையும் நீயே தந்தருள வேண்டும்’ என அவரது பாதத்தில் நமது வேண்டுதல்களை வைத்து விட வேண்டும். அதன் பிறகு தீப தூப ஆராதனை காட்டி, ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் வைத்து வழிபாட்டை செய்து கொள்ளலாம்.
இந்த முருகனின் நாமத்தை நமக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, அந்த நேரங்களில் எல்லாம் நம் மனதில் ஜெபித்துக் கொள்ளலாம். அந்த நாமத்திற்கான பலன் என்பது நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்.