DMK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளில் மாநில கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனவும் முயன்று வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் காரணமாக அக்கட்சி இந்த தேர்தலிலும் தோல்வியை தான் தழுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை சுதாரித்த திமுக தலைமை அதன் கூட்டணி கட்சிகளையும், உட்கட்சி விவகாரங்களையும் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது. ஆனாலும் கூட திமுக கூட்டணி கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டே செல்கின்றன. இதனை முதலில் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆரம்பித்த நிலையில் தற்போது புதிதாக, திமுக உடன் பல ஆண்டுகளாகவே கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்கள் திமுக தலைமையிடம் எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்போம் என்று கூறியுள்ளது.
நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டணியில் 30 முதல் 40 தொகுதிகள் வரை கேட்க எங்களுக்கு உரிமை உண்டு. எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதனை ஜனநாயக விரோதமாக முதல்வர் எடுத்து கொள்ளமாட்டார். அதனால் சூழலுக்கேற்ப முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதனை திமுக தலைமை கொடுத்து தான் ஆக வேண்டுமென்ற தோனியில் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.