மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!

0
82
Manickam Tagore's disqualification case.
Manickam Tagore's disqualification case.

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!

தமிழகத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் இவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், தேர்தலின்போது விருதுநகர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே மாணிக்கம் தாகூரின் முகவர்கள் சிலர் மீது விருதுநகர் மற்றும் மதுரை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி தேர்தல் விதிகளை மீறிய மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு அளித்த கோரிக்கைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் தேர்தல் விதிமுறையை மீறிய குற்றத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விட்டதாகவும், ஒரு வாரத்தில் மனு மீது முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். ஒரு வாரம் கழித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்க உள்ளது என்பது குறித்து பரபரப்பு நிலவி வருகிறது.