ADMK TVK: பல வருடங்களாக தமிழகத்தை அதிமுகவும், திமுகவும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இந்த இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி ஆரம்பித்த முதல் மாநாட்டிலேயே தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்திருந்தார்.
மேலும் கூட்டணி அமைப்பதற்கு தயார் என்றும் கூறியிருந்தார். அப்போதிலிருந்தே திரை மறைவில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் விஜய் இதுவரை அதற்கான அறிவிப்புகளை வெளியிடவில்லை. அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர் பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விஜய்யிக்கு எதிராக பலரும் குரல் எழுப்பினர். ஆனால் இபிஎஸ் விஜய்யிக்கு ஆதரவாக மட்டுமே பேசி வந்தார். நேற்று தர்மபுரியில் நடந்த அதிமுக பிரச்சாரத்தில் கூட 41பேர் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறு இபிஎஸ் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியது அவரை கூட்டணியில் சேர்க்க தான் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. அதிமுகவிற்கும், தவெகவிற்கும் ஒரே அரசியல் எதிரி திமுக என்பதால் இவர்கள் கூட்டணி உருவானால் அது திமுகவிற்கு பாதகமாக அமையுமென்றும் கூறப்படுகிறது. மேலும் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தவெக தொண்டர்கள் பலரும் இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தது கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.