தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் சென்ற மே மாதம் நடந்து முடிந்த 12 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடவுள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் இணையதள முகவரி உள்ளிட்டவை கீழே தெரிவிக்கப்படுகிறது.
வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு நாள் மற்றும் நேரம்.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்:காலை 9.30 மணியளவிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பகல் 12 மணியளவிலும், வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1tn.nic.in www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களின் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும், குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உயர்கல்வி நிறுவனங்களில் இணைவதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.