எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்!

Photo of author

By Sakthi

காலம் காலமாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்வதும், இலங்கை சிங்கள அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது..ஆகவே இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வலியுறுத்தியும் அதனை பெரிய அளவில் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதன் காரணமாக, இலங்கை அரசின் அட்டூழியம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, பல மீனவர்கள் துயரத்தில் இருந்து வருகிறார்கள்.வாழ்க்கையின் ஆதாரத்தைத் தேடிக் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீண்டும் கரைக்கு வந்தால்தான் நிலைமை என்ற சூழ்நிலையில், கடலுக்குள் சொல்கிறார்கள். அப்படி உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது பல வருட காலமாக தொடர்ந்து கொண்டு வருகிறது.

இந்தநிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்று 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றவர்கள். இந்த சூழ்நிலையில், கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையை சார்ந்தவர்கள் ரோந்து பணிக்காக வந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து 16 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையின் காரணமாக கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 21 மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நடுவில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு வருகின்றது. இதனை கண்டிக்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், தற்போது இலங்கை கடற்படையினர் மேலும் 16 மீனவர்கள் உள்ளிட்டோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருப்பது ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .