தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் பள்ளி மாணவர்களின் தற்கொலை முயற்சி! அரசு என்ன செய்யப் போகிறது?

Photo of author

By Sakthi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கின்ற கனியாமூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்படுகிறது.

ஆனாலும் கூட மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது இதனை அடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் என்று விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

இப்படியான நிலையில், சேலம் மாவட்டம் மேச்சேரி அமரம் கிராமத்தைச் சார்ந்த மாதேஷின் காமாட்சி தம்பதியினரின் 16 வயது மகள் கோகிலாவாணி மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த அந்த மாணவி வகுப்பறையில் தன்னுடைய புத்தகப் பையை வைத்துவிட்டு பள்ளியின் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

இதனால் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அந்த மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதே போல காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் ஆரப்பாக்கம் பகுதியைச் சார்ந்த மணிராம், ரோஸ்லின், தம்பதியின் மகன் யுஷிகாந்த் என்ற 16 வயது மாணவன் 11ம் வகுப்பில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் நேற்று மாலை பள்ளியின் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து இருக்கிறார். காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

முதல் கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.