ADMK PMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி குறித்த வியூகம் வலுப்பெற்று வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணி, போன்ற இருபெரும் கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த கூட்டணி கட்சிகள் வேறு எந்த கட்சியை நம் பக்கம் இழுக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. அதிமுக, திமுகவின் முக்கிய இலக்காக உள்ள கட்சி பாமக, தேமுதிக, தவெக தான்.
விஜய், திமுக தான் தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்ட நிலையில், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாமக, தேமுதிக-வை தங்கள் கூட்டணியில் சேர்க்க திராவிட கட்சிகள் முயன்று வரும் நிலையில் தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்துள்ளது அதிமுக. முதலில் அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், பாமக நிறுவனர் ராமதாசிடமும் மருத்துவமனையில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு ராமதாஸ் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் அன்புமணி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இபிஎஸ் உதவ வேண்டுமென்றும், 28 அல்லது 32 பேரவை தொகுதிகளும், 1 மாநிலங்களவையை கேட்டதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணியில் பாமக 27இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வென்றுள்ளது.
இதுவே பாமக அரசியல் வரலாற்றில் மிக பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் 2021யில் அதிமுக-பாமக கூட்டணியில் பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. ராமதாசின் இந்த நிபந்தனைக்கு அதிமுக தரப்பு யோசித்து முடிவெடுக்க படும் என்று கூறியுள்ளதாம். ஆனால் அதிமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் 27 தொகுதிகள் என்பது மிகவும் அதிகம், இதனை பார்த்து மற்ற கூட்டணி கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறி வருகின்றனர் என்ற தகவலும் வந்துள்ளது.