பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து! 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி!

Photo of author

By Sakthi

கரூரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இன்று அதிகாலை கார் மூலமாக சீர்காழியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அந்த காரில் ஒட்டுமொத்தமாக 5 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகில் பேரையூர் என்ற கிராமத்தில் இன்று அதிகாலை கார் சென்று கொண்டிருந்தபோது காருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

ஆகவே அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில் கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டு விபத்துக்குள்ளானதால் கார் அப்பளம் போல நொறுங்கி போய்விட்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 1 ஆண், சிறுமி, 2 பெண்கள், என்று ஒட்டுமொத்தமாக 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதேசமயம் காரில் பயணம் செய்த 6 வயது சிறுவன் ஒருவன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த மங்களமேடு காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.

அதோடு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கின்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.