பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!
பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகர் உள்ளது. இங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு மணி அளவில் ஒரு பேருந்து திடீரென விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்த விபத்தின்போது அலறித் துடித்தார்கள்.
மேலும் பேருந்து முழுதும் தீப்பற்றி எரிந்தது. இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி பலியாகி விட்டனர். மேலும் இந்த தீப்பிடித்த பேருந்தில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் விபத்திற்கான காரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உயிரிழப்புகளை தற்போது உறுதிபடக் கூறி உள்ளது. மேலும் பல்கேரியாவின் இடைக்கால பிரதமர் ஸ்டெபான் யானேவ் வருத்தம் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பலரும் வடக்கு மேசிடோனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர். இதற்கு வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜாயேவ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.