ஒரு வீடு என்றால் அதில் பூஜை அறை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. தனியாக பூஜையறையை கட்டா விட்டாலும் கூட, பூஜை அலமாரிகளை வாங்கி வைத்து வழிபட வேண்டும் என்ற பழக்கம் முந்தைய காலங்களில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. பூஜை அறை இல்லாத வீடு ஒரு வீடாகவே கருதப்படாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பூஜை அறை.
அந்த பூஜை அறையில் கண்டிப்பாக 5 கடவுள்களின் புகைப்படம் இருக்க வேண்டும். விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் போன்ற ஐந்து கடவுள்களின் புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதை தவிர்த்து உங்களது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் போன்ற புகைப்படங்களையும் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோன்று பூஜை அறையில் அந்த வீட்டுப் பெண்கள் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பரவும். தினமும் விளக்கேற்றி தீப தூப ஆராதனை காட்டி சாம்பிராணி தூபம் போடுவதன் மூலம், அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் உண்டாகும். இது குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
ஒரு வீட்டிற்கு கடவுளின் அருள் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல், நிம்மதியாக வாழ முடியும். மேலும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் காண முடியும். பண பற்றாக்குறை இல்லாமல், கடன் பிரச்சனைகள் இல்லாமல் ஒரு குடும்பம் இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு தடை இல்லாத பண வரவு என்பது இருக்க வேண்டும்.
அதற்கு முதலில் கடவுளின் அருள் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பெரும்பாலான குடும்பங்களில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பணப்பற்றாக்குறை தான். இந்த பண பற்றாக்குறை குடும்பத்திற்கு ஏற்படக்கூடாது என்றால் இந்த முக்கியமான 5 மங்களப் பொருட்களும் உங்கள் வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த ஐந்து பொருட்களும் பண ஈர்ப்பு சக்தியை கொண்டவை.
எனவே இவை உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் பொழுது பண ஈர்ப்பு சக்தி அதிகரித்து பணவரவையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த 5 மங்களப் பொருட்களும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களாகும். எனவே இந்தப் பொருட்கள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயார் கண்டிப்பாக வாசம் செய்வார். வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய அந்த ஐந்து மங்களப் பொருட்கள் எவை? என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
1. வசம்பு 2. வெட்டிவேர் 3. கிராம்பு 4. ஏலக்காய் 5. பச்சைக் கற்பூரம். இந்த ஐந்து பொருட்களும் தான் உங்களது வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த ஐந்து பொருட்களும் பண வசிய சக்தியை பெற வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் ஒன்பது வசம்பினை மஞ்சள் நிற நூல் கொண்டு சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சிறிதளவு வெட்டிவேர், 9 ஏலக்காய், 9 கிராம்பு, சிறிதளவு பச்சை கற்பூரம் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி, அதன்மேல் உங்களது குலதெய்வத்தின் பெயரை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த மூட்டையை பூஜையறையில் ஒரு பலகை அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைத்து, அதாவது அந்த மூட்டை உயரமாக தெரியும்படி வைக்க வேண்டும்.
இவ்வாறு வைத்து பூஜை அறை வழிபாட்டின் பொழுது அந்த மூட்டைக்கும் தீப தூப ஆராதனை காட்டி, வழிபாடு செய்யும்பொழுது பணவரவு என்பது நிச்சயமாக ஏற்படும். அதேபோன்று ஒரு வசம்பினை எடுத்து தீபத்தில் சுட்டால் கருப்பு நிறமாக மாறும். அதனை ஒரு கட்டையின் மேல் தேய்த்தால் கருப்பு நிற சாம்பல் உருவாகும். அந்த சாம்பலில் சிறிதளவு நெய் கலந்தால் கருப்பு நிற மை போன்று உருவாகும். அதனை தினமும் உங்களது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்.