இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

Photo of author

By Sakthi

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

Sakthi

கச்சத்தீவருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையைச் சார்ந்தவர்கள் கைது செய்யும் சம்பவங்கள் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

சென்ற மாதம் 21ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த பாலமுருகன், அந்தோணி, கிருஷ்ணன், தங்கபாண்டி, அஜித், மடுகு பிச்சை, உள்ளிட்ட 6 மீனவர்கள் தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவுக்கருகே மீன்பிடித்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து அவர்கள் ஆறு பேரையும் இலங்கை கடற்படையை சார்ந்தவர்கள் சிறைபிடித்து மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர், இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 6 பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்கள்.

இந்த நிலையில் அவர்களை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும் மறுபடியும் எல்லை தாண்டி வந்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.

விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.