பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்!
குழந்தைகளுக்கு சில விளையாட்டுக்கள் பிடிக்கும், சில விளையாட்டுக்கள் பிடிக்காது. பெற்றோர்கள் நாம்தான் அவர்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்று பார்த்து சேர்த்துவிட வேண்டும். அவர்களது எதிர்காலம் சிறப்படைய இதுவே ஒரு நல்ல வழியாக இருக்கும். அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் நாம் அதை செய்யும் போது, அதுவே அவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.
அவர்களின் எதிர்காலம் சிறக்க நாம் விருப்பப்பட்டால் அவர்களிடமும் அது சரியா என்று ஒருமுறை கேட்டுக் கொள்ள வேண்டும். தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 7 வயது சிறுவனை அவரது மாமா கடந்த மாதம் 21ஆம் தேதி ஜூடோ பயிற்சி அளிக்கும் ஒரு மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 60 வயதான ஜூடோ பயிற்சியாளர் சக மாணவர் ஒருவனை அழைத்து அந்த சிறுவனுக்கு ஜூடோ பயிற்சி அளித்தார்.
அப்போது அந்த மாணவன் சிறுவனை தூக்கி பலமுறை கீழே வீசியுள்ளார். அதில் அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் கீழே கிடந்து கதறிய போதும் அந்த பயிற்சியாளரோ, அவனை மீண்டும் எழுந்து நின்று பயிற்சியை தொடரும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. அந்த சிறுவனும் அழுது கொண்டே தனது பயிற்சியை தொடர, அந்த மாணவன் மீண்டும் மீண்டும் அவனை தரையில் தூக்கி வீசியுள்ளான்.
இப்படி அந்த மாணவன் தொடர்ந்து 27 முறை அந்த சிறுவனை தரையில் தூக்கி வீசியுள்ளான். அதன் காரணமாக சிறுவன் சுயநினைவை இழந்துள்ளான். ஆனாலும் அந்த பயிற்சியாளர் சிறுவனை சிறிதும் கவனிக்காமல், அவன் நடிக்கிறான் என்று அவன் மீதே குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து சிறுவனின் மாமா சிறுவனை பரிசோதித்த போது, அவன் உண்மையிலேயே சுயநினைவு இழந்தது தெரியவந்தது.
பதறிப்போய் அவனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்தச் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாக்டர்கள் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், அவன் கோமா நிலையில் சென்றுவிட்டான். அப்படியே அவனுக்கு சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இயந்திரங்களுடன் போராடி பரிதாபமாக உயிரிழந்தான்.