சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது.
அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய கிரேன் கீழே விழுந்தது. கட்டிடத்தின் உச்சியில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் தழும்பி தழும்பி கீழே கொட்டிய வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும், பல கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தது. பாங்காங் நகரத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1700 பேர் வரை இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மியான்மர் ரம்ஜான் பண்டிகைக்காக ஒரே இடத்தில் தொழுகை செய்து கொண்டிருந்த 700 பேர் நிலநடுக்கத்தின் காரணமாக பூமியில் புதைந்து மரணமடைந்துவிட்டதாக மியான்மரில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பு அறிவித்திருக்கிறது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மியான்மர் மட்டுமில்லாமல் தாய்லாந்து பாங்காக் ஆகியவற்றில் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில், அங்கும் பல நூறு பேர் உயிரிழந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு இந்தியாவும் நிவாரண பொருட்களை அனுப்பவதோடு, மீட்பு பணியிலும் கைகார்க்கவுள்ளது. இதுவரை இந்த அளவுக்கு மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இவ்வளவு உயிர்கள் பறிபோனதில்லை என்கிறார்கள். இந்த நில நடுக்கத்தால் பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். அதேபோல், பலரும் தங்கள் வீடுகளையும், சொந்தங்களையும் இழந்துள்ளனர்.