தமிழ்நாட்டில் மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி 40,000 பகுதிகளில் 28.91லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 20 ஆயிரம் பகுதிகளில் 16.43 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதேபோல 26ம் தேதி 23000 பகுதிகளில் 25.04 லட்சம் நபர்களுக்கும், அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி 20 ஆயிரம் பகுதிகளில் 17.04 லட்சம் நபர்களுக்கும் 10ஆம் தேதி 32000 பகுதிகளில் 22.85 லட்சம் நபர்களுக்கும், தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
அதோடு அக்டோபர் மாதம் 23ம் தேதி நடந்த ஆறாவது தடுப்பூசி முகாமில் 22.27 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல சென்ற முப்பதாம் தேதி ஏழாவது கட்டமாக முப்பத்தி இரண்டாயிரம் பகுதிகளில் 17.14 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மழை பெய்த காரணத்தால், கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை, பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து இரண்டாவது வாரமாக சனிக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
அதனடிப்படையில் எட்டாவது கட்ட தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 50 ஆயிரம் பகுதிகளில் நடந்தது. சென்னையில் மட்டும் 2,000 பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடந்த தடுப்பூசி முகாம்களில் 18 வயதிற்கும் அதிகமானவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்ததும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 75 லட்சம் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுமார் 12 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தாலும் நேற்று நடைபெற்ற எட்டாவது கட்ட தடுப்பூசி முகாம் 16 லட்சத்து 32 ஆயிரத்து 498 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 809 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 10 லட்சத்து 87 ஆயிரத்து 689 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும், செலுத்தி கொண்டார்கள்.
சென்னையில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 286 பேர் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள் இதில் 29 ஆயிரத்து 415 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 76 ஆயிரத்து 871 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல கடலூரில் 94 ஆயிரத்து 718 நபர்களுக்கும் கோயமுத்தூரில் 28, 886 நபர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக, இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.