கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது நாடு முழுவதும் மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்க தடை கொண்டு வந்து இந்திய மக்கள் அனைவரிடமும் பாராட்டை பெற்றார். அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அதற்கான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்த பட்டு அட்டை படங்களில் புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான விளைவுகளை விளம்பரமாக அச்சிட்டு விற்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது. சினிமாவில் புகையிலை மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளை வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் விளையாட்டான கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் இது போன்ற புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி வரும் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தின் நகல்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு அதிகாரி, இந்திய சுகாதார அமைச்சகத்தின் புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு இணைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அவர் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தின் விவரம்:
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 6 ஆம் நாள் ஹைதராபாத் நகரிலும் டிசம்பர் 8 ஆம் நாள் திருவனந்தபுரம் நகரிலும் நடைபெற்ற போது ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டதை உங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறேன். ‘பான் மசாலா’ என்கிற போலி பெயரில் இந்த புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டை பின்பற்றும் பல கோடி இளைஞர்களை ஈர்ப்பதற்கு புகையிலைப் பொருள் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சமூக பொறுப்பை உணர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
புகையிலைப் பொருட்களுக்கு மனிதர்கள் அடிமையாவதை ‘ஒரு தொற்றவைக்கப்படும் நோய்’ (a communicated disease) என்று உலக சுகாதார அமைப்பு அழைக்கிறது. விளம்பரங்கள், விளையாட்டுகள் உள்ளிட்ட வழிகளில் இந்த நோய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. புகையிலை பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்து போகும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஈடாக, புதிய வாடிக்கையாளர்களை இளம் வயதிலேயே அடிமையாக்கும் நோக்கில் புகையிலைப் பொருள் நிறுவனங்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றன. அந்த நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதற்கு அவற்றின் இத்தகைய விளம்பர யுக்திகளே காரணமாகும்.
விளம்பரங்களாலும் புகையிலையை திணிக்கும் இதர நடவடிக்கைகளாலும் ஒட்டுமொத்த புகையிலைப் பொருள் பயன்பாடு அதிகமாகிறது. எனவே புகையிலைப் பொருட்கள் மீதான விளம்பரத்தடைகளை முழுமையாக செயலாக்குவதன் மூலம் இத்தீமையை கணிசமாக குறைக்க முடியும். புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகி, பின்னர் அதிலிருந்து மீண்டவர்களை மீண்டும் அடிமையாக்க இத்தகைய விளம்பரங்கள் வழிவகுக்கின்றன. புகையிலைப் பொருட்கள் மீதும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் மக்களிடையே நிலவும் வெறுப்புணர்வை சரிக்கட்டவும் விளம்பரங்கள் வழிசெய்கின்றன. எனவே புகையிலைப் பொருட்களால் நேரும் அடிமைத்தனம், நோய்கள், இறப்பு ஆகியவற்றை தடுப்பதற்கு புகையிலைப் பொருட்களின் விளம்பரம், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புரவலர் செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக தடுக்க வேண்டும்.
“புகையற்ற புகையிலை (Smokeless tobacco)”
உலக அளவில் புகையிலைப் பயன்பாடு என்பது தீங்கான பழக்கமாக மட்டுமல்லாமல், மனித குலம் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பொதுச் சுகாதார பேராபத்தாகவும் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் நிகழும் பத்து மரணங்களில் ஒன்றிற்கு புகையிலைப் பழக்கம் காரணமாக உள்ளது.
இந்தியாவில் பீடி, சிகரெட் போன்ற புகைபிடிக்கும் பழக்கத்தை விட – குட்கா, பான்மசாலா, கைனி போன்ற புகையற்ற புகையிலைப் பொருட்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவின் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 21.4% பேர் புகையற்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். புகை பிடிப்போர் அளவு 10.7% ஆகும்.
புகையற்ற புகையிலை பழக்கம் என்பது புகையிலையை பற்றவைத்து புகையை சுவாசிக்காமல் – வாய்வழியாகவோ, மூக்குவழியாகவோ நேரடியாக புகையிலை பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் ஆகும். இப்பழக்கம் மிக அதிக அளவு அடிமையாக்கக் கூடியதாகும். வாய் மற்றும் கழுத்துப் பகுதி புற்று நோய்களுக்கு இது காரணமாகும். கூடவே இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை இப்பழக்கம் உருவாக்குகிறது. இந்தியாவில் ஏற்படும் வாய்ப்புற்று நோய்களில் 90% அளவுக்கு இதுவே காரணமாகும்.
இந்தியாவில் புகையற்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மலைக்கவைக்க கூடிய அளவாக இருக்கிறது:
கைனி எனும் புகையற்ற புகையிலைப் பொருளை 10,40,81,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது ஆகும்.
குட்கா எனும் புகையற்ற புகையிலைப் பொருளை 6,35,83,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது ஆகும்.
வெற்றிலையை புகையிலையுடன் சேர்த்து 5,40,97,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது மியான்மர் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும்.
புகையிலையை நேரடியாக 3,57,04,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது கனடா நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது ஆகும்.
பான் மசாலாவை புகையிலையுடன் சேர்த்து 2,65,37,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும்.
மூக்குப்பொடியை 58,38,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது சுவீடன் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
ஆகவே, இந்தியாவில் புகையற்ற புகையிலை விற்பனை என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் மாபெரும் தொழில் ஆகும். அதனால், புகையற்ற புகையிலைப் பொருள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களும் மாபெரும் அளவில் உள்ளன.
“கிரிக்கெட்டும் புகையிலை விளம்பரங்களும்”
இந்தியா ஒரு விளையாட்டு தேசமாக உருவெடுத்து வருகிறது. விளையாட்டுகளை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதனை உறுதி செய்கின்றன. விளையாட்டு அணிகள் மீதும் வீரர்கள் மீதும் தங்களது அன்பையும் விசுவாசத்தையும் விளையாட்டு ரசிகர்கள் வெறித்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். விளையாட்டுகள் மீதான இளைஞர்களின் பேரார்வத்தை புகையிற்ற புகையிலை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. விளையாட்டுகளை பார்க்கும் கோடிக்கணக்கானவர்களிடம் தங்களது புகையிலைப் பொருட்களை அறிமுகப்படுத்தவும், அவர்களது மூளைக்குள் புகையிலைப் பொருட்களை திணிக்கவும் விளையாட்டை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட் தான். இங்கு கிரிக்கெட் ஒரு மதமாக மாறி சமூகத்தில் ஊடாகவும் பாவாகவும் ஊடுருவி உள்ளது.
இந்திய ஒலிபரப்பு வாடிக்கையாளர் ஆய்வு நிறுவனத்தின் 2018 அறிக்கை படி – இந்தியாவில் 76.6 கோடி பேர் விளையாட்டுகளை தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றனர். அவர்களில் 93% பேர் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். அவர்களில் 52% பேர் 30 வயதுக்கு கீழான இளைஞர்கள் ஆகும். 2018 ஆம் ஆண்டில் மட்டும் 2.29 லட்சம் விளம்பரங்கள் கிரிக்கெட் போட்டிகளின் போது தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அவற்றில் முன்னணி விளம்பரங்கள் பட்டியலில் புகையற்ற புகையிலைப் பொருட்கள் விளம்பரம் உள்ளது. 2019 ஐபிஎல் போட்டிகளின் போது மட்டும், ‘பான் மசாலா, சர்தா, குட்கா’ ஆகிய புகையற்ற புகையிலை விளம்பரங்கள் 10,452 முறை செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போது மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. இந்திய குழந்தைகளின் மீதும் இளைஞர்கள் மீதும் புகையற்ற புகையிலைப் பொருட்களை திணிக்கும் ஒரு கருவியாக கிரிக்கெட் போட்டிகளை புகையிலைப் பொருள் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
“புகையிலைப் பொருள் விளம்பரத் தடை”
இந்தியாவில் புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை மேற்கொள்வதற்கு 2004 ஆம் ஆண்டுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடுப்பு மற்றும் வணிகம், மொத்தவியாபாரம், உற்பத்தி, கொள்வினை கொடுப்பினை, மற்றும் விநியோகம் முறைப்படுத்தல்) சட்டம் 2003 (The Cigarettes and Other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act 2003). பிரிவு 5-ன் கீழ் புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதும், ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை ஒலி ஒளி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் புகையிலைக் குழுமங்கள் எந்த ஒரு விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு விளம்பர ஆதரவு தரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சக அரசாணை எண். GSR 345, நாள் 31.05.2005-ன் படி புகையிலைப் பொருட்களின் பிராண்ட், அதன் வண்ணம், வடிவம், வணிகச்சின்னம் போன்ற எதனைப் போன்றும் தோற்றமளிக்கும் வேறு எந்தவொரு பொருளையும் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட விவரங்கள் அடிப்படையில், புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்தும் சட்டவிரோதம் ஆகும். புகையற்ற புகையிலைப்பொருள் நிறுவனங்கள், இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உள்ளிட்ட சட்டத்தை மீறும் அனைவரும் இக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆகும்.
“சென்னையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் போட்டி”
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 6 ஆம் நாள் ஹைதராபாத் நகரிலும் டிசம்பர் 8 ஆம் நாள் திருவனந்தபுரம் நகரிலும் நடைபெற்ற போது புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டதை போன்று, சென்னையில் வரும் டிசம்பர் 15 ஆம் நாள் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
புகையிலை பழக்கம் பல லட்சம் இளைஞர்களின் வாழ்வை சீரழித்து வருவதை தடுக்கும் வகையில் இத்தகைய விளம்பரங்களுக்கு காரணமாவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே சென்னையில் டிசம்பர் 15 ஆம் நாள் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார் உள்ளிட்ட புகையிலைப் பொருள் விளம்பரங்கள் சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்படுவதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் 2003 தடுக்கப்பட வேண்டும். இது இந்திய புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள படி அவசியமாகும்.
எல்லாவிதமான புகையிலைப் பொருட்களையும் விளம்பரம் செய்வதையும், ஊக்குவிப்பதையும், ஆதரிப்பதையும் இந்தியாவில் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
T20 #INDvsWI #INDvWI #WestIndies #India #EndTobaccoAdvertisingInCricket
(படம்: சென்னையில் டிசம்பர் 15 அன்று நடக்கவுள்ள ஒருநாள் போட்டிக்காக – சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் வைக்கப்படும் புகையிலை விளம்பரம்)