கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாராளர் உள்ளிட்டோரின் கைதுக்கான காரணத்தை தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராவதற்கு உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் குறித்து மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தார்கள். கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதற்கு நடுவே மாணவி மரணம் வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது எந்தவிதமான வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை எனவும், வாதம் செய்யப்பட்டது.
அதேபோல மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் தங்களுடைய மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதி மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை விளக்கி கூறியிருக்க வேண்டும் என்று காவல்துறை வழக்கறிஞரை அறிவுறுத்தினார் என்று சொல்லப்படுகிறது.