கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிக்கேரியில் அமைந்துள்ளது ஓம்கரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருப்பது இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
இந்த கோவிலின் நடுவே குவி மாடமும், நான்கு புறங்களிலும் ஸ்தூபிகளும் அமைந்துள்ளன. மேலும் அதனை சுற்றி ரிஷபங்களும், இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசப்பட்ட உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் பக்தர்கள் முன் வைக்கும் அனைத்து விதமான வேண்டுதல்களும், நடைபெறும் என்றும், சொல்லப்படுகிறது. தங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் இறைவனுக்கு வஸ்திரம் சாற்றியும், நெய்விளக்கு ஏற்றியும், தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
இந்த கோவிலை மன்னன் லிங்க ராஜேந்திரன் கடந்த 1820 ஆம் வருடம் கட்டியதாக இந்த கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது. அதோடு கொடுங்கோல் ஆட்சியாளரான அந்த மன்னன் தன்னுடைய அரசியல் ஆசை காரணமாக ஒரு அந்தணரை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
இதன் காரணமாக அந்த மன்னனின் கனவிலும், நனவிலும் வந்து உலுக்கி எடுத்தார் அந்த அந்தணர்.
இந்த சித்திரவதையை தாங்கிக் கொள்ள முடியாத அந்த மன்னன், ஆன்மீக பெரியோர்களின் ஆலோசனையினடிப்படையில், சிவபெருமானுக்கு கோவில் ஒன்றை கட்டினார். மேலும் அந்த கோவிலில் காசியில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். இந்த கோவில் தான் பின்னாளில் ஓம்காரேஸ்வரர் கோவில் என்று பெயர் பெற்றது.
இந்த கோவில் நாள்தோறும் காலை 5 மணியிலிருந்து 8 மணி வரையிலும் மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரையிலும், திறக்கப்பட்டிருக்கும்.
பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.