தனி ஒருவனாக போராடிய ரிங்கு சிங்!! போராடி தோல்வி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!!
நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இதையடுத்து லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் டிகாக் 28 ரன்களும், பிரேராக் மன்கட் 26 ரன்களும், ஆயுஷ் பதோனி 25 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் பந்துவீச்சில் சுனில் நரைன், சர்தல் தக்கூர், வைபவ் ஆரோரா மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
179 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 45 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரிங்கு சிங் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். கடைசி வரையில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 67 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19 ரன்கள் அடித்தார். ரிங்கு சிங் போராடியும் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது. கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து நான்கவது அணியாக வெளியேறியது.