உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்!! சீனாவில் முதல் பயணத்தை தொடங்கியது!!
முழுக்க முழுக்க சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை நேற்று ஷாங்காயில் தொடங்கி தலைநகரான பீஜிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.
சீனா நாட்டில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்தி 2017ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து பலகட்டமாக இந்த சி-919 விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உயர் வெப்பநிலை, அதிக ஈரப்பதம், காற்று, உறைபனி போன்று பல்வேறு இயற்கை சூழல்களில் இந்த விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனைகளில் சி919 விமானம் வெற்றி பெற்றதை அடுத்து 2022ம் ஆண்டு சிவில் விமான நிர்வாகத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் சி919 விமானம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீன அரசுக்கு சொந்தமான சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து விமான சரிபார்ப்பை கருத்தில் கொண்டு சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம் 100 மணி நேரம் சி919 விமானத்தை வைத்து சோதனை செய்து பணிகளை முடித்தது.
இதையடுத்து சினாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சி919 விமானம் தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் ஷாங்காயில் இருந்து புறப்பட்ட சி919 விமானம் அதன் தலைநகரான பீஜிங் விமான நிலையத்திற்கு சென்றது. முதல் பயணத்தை நிறைவு செய்த சி919 விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் மரியாதையின் அடையாளமாக நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதற்கு மத்தியில் விமானத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திறன் ஆகியவை விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை செய்து தருவதற்காக 32 வாடிக்கையாளர்களிம் இருந்து ஆர்டர் வந்துள்ளதாக சீனா நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலமாக சர்வதேச சிவில் விமான சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் போயிங், ஏர்பஸ் போன்ற நிறுவனங்களுக்கு சீனா நாடு போட்டியாக வரும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.