செய்தியாளர்களை சந்திக்காத காரணம் என்ன? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலும் இந்த வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கபட்ட மாநிலங்களில் 3 வது இடத்தில் தமிழகம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் பொது மக்களும் இது குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஆரம்ப காலத்தில் தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களையும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டு வந்தார். சமீக காலமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சூழலில் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “தமிழகத்தை காக்க வந்த போதி தர்மர்,நாளைய முதல்வர்” என எடப்பாடி தரப்பை ஆட்டி பார்க்கும் வகையில் மீம்ஸ்கள் வெளி வந்தன. இதனையடுத்து சுதாரித்து கொண்ட எடப்பாடி தரப்பு என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை திடீரென்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். மேலும் அவரை பாராட்டி யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டார் என வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அவருக்கு பதிலாக சுகாதார துறை சார்பாக அந்த துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அவரும் அமைச்சர் செயல்பட்டது போல சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கோரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு தான் உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் கடும் சர்ச்சைகளுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்க அளித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது கடந்த 15 நாட்களாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ” நான் செய்தியாளர்களை நேற்று கூட சந்தித்தேன். துறையின் செயலாளர் என்ற முறையில் முதல்வரின் ஆலோசனையின் பேரில் புள்ளி விவரங்களை அவர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில் நான் மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லையே தவிர நீங்களா வேறு எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்று புள்ளி வைத்துள்ளார்.