ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சந்திரமுகி திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்பொழுது உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் உருவாகி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இதையடுத்து இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வந்தது. அதில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ரவிமரியா, லக்சுமி மேனன், ஸ்ருஸ்டி தாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் லைகா புரொடக்சன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. இதையடுத்து பேன் இந்தியா திரைப்படமாக உருவாகிய சந்திரமுகி 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியானது.
65 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட சந்திரமுகி 2 திரைப்படம் பாக்ஸ் உலக அளவில் வெறும் 49 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. வசூல் ரீதியாக தோல்வியடைந்த சந்திரமுகி 2 திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதன்படி சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் மாதம் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகிய பொழுதே போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகும் பொழுது வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.