மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல்

0
161
Director Thangarbachan Criticise TN Govt in Tasmac Opening-News4 Tamil Online Tamil News
Director Thangarbachan Criticise TN Govt in Tasmac Opening-News4 Tamil Online Tamil News

மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல்

தமிழகத்தில் நேற்று முதல் சில கட்டுபாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அனைவரும் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலரும், திரைப்பட இயக்குனருமான தங்கர்பச்சான் தமிழக அரசிற்கு எதிரான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிப்பின் போது எதிர்கொள்ளும் பரபரப்பான பதட்டமான மனநிலையில்தான் ஊடகச்செய்திகளைப் பார்க்கிறேன். உலக நாடுகளும்,உலக சுகாதார நிறுவனமும்,மருத்துவத்துறை வல்லுனர்களும் கூட கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து நமது அரசை பாராட்டி வரவேற்றார்கள். இந்நிலையில்தான் கோயம்பேடு காய் கனி வளாகம் தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கின்றோம்! மதுக்கடைகளை திறக்கிறார்கள் எனும் செய்தி வெளியான போது பதட்டம் மேலும் அதிகமானது. இப்போது நீதிமன்றம் கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்து கடைதிறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் மீறப்படும் போது மீதமிருப்பவர்களுக்கும் மதுக்கடைகள் கிருமியை கொண்டு சேர்த்துவிடுமே எனும் கவலை அனைவரையும் சோர்வடையச் செய்திருக்கிறது.

இதிலிருந்து மீண்டு விடலாம் என 43 நாட்கள் குடிக்காமல் தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தால் தான் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. எல்லையில் கடை திறந்து விட்டார்கள் என காரணம் கூறி பழியை மக்களிடத்தில் போடுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தால் குடியை மறந்து வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும் என்று நினைத்து இப்போது திறக்கிறார்களோ எனும் எண்ணம் எழுகிறது!

நான் சிறுவனாக இருந்தபோது அரசாங்கத்திற்குத் தெரியாமல் சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைகளைக்கட்டி தலையில் குடத்தை வைத்து வீதி வீதியாக அடித்து இழுத்துக் கொண்டு போவதை பல முறை பார்த்திருக்கிறேன். அதைப்போல் அதை வாங்கி குடிப்பவர்களுக்கும் அடி உதை சிறைதண்டனை எல்லாம் உண்டு. ஆனால் இந்த 40 ஆண்டுகளுக்குள் சாராயம் விற்கின்ற வேலையை அரசாங்கமே செய்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் குடிக்கத்தொடங்கி அடிமையாகி அலைகிறார்கள். மக்களை காக்க வேண்டியவர்கள் இந்தபேரழிவு காலத்தில்கூட இப்படி செய்யலாமா எனக்கேட்டால் ‘ஆட்சி நடத்த பணம் இல்லை; அதற்காகத்தான் மதுக்கடைகளை திறக்கிறோம்’ எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடு விளைவிக்கும் அவமானத்திற்குரிய செயல்?

மக்களை வாழ வைப்பதற்காகவே தான் அரசியலுக்கு வருகிறேன்! என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்! எனக்கூறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்து ஊழலை அறிமுகப்படுத்தினார்கள். தான் மட்டும் திருடினால் தானே கேள்விகள் கேட்பார்கள் என்பதற்காக தன் கீழ் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடைநிலை வரை உள்ள கட்சிக்காரர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் ஊழல் செய்ய அனுமதித்தார்கள். இந்த திருடர்கள் பணக்காரர்களாக மாறுவதை கண்ட மக்கள் கேள்வி கேட்க தொடங்கியபோது, அவர்களின் வாயையும் அடைப்பதற்காகவே பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்கி தங்களின் திருட்டை நியாயப்படுத்திக் கொண்டார்கள்.

Thangar Bachan

இந்நிலையில் யார் யாரைப்பார்த்து கேள்வி கேட்க முடியும்? அரசியலுக்குள் நுழையும்போது கடந்த காலங்களில் அவர்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை. அனைத்து தொழில்களையும் ஒழித்துவிட்டு அரசியல் தொழில் மட்டுமே இன்றைக்கு கொடி கட்டி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்கள் எல்லோருமே தெரிந்ததுதான். வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்தை இழந்து மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக சுருக்கி, இருப்பதைக்கொண்டு ஊரடங்கில் உயிர் வாழும் மக்களிடமே நன்கொடை கேட்கும் அரசாங்கத்தை உலகத்தில் எங்கேயாவது கண்டிருக்க முடியுமா?

உயிர் பற்றிய கவலையை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஐந்து கிலோ அரிசிக்காக அதிகாலையே வந்து வரிசையில் இடம்பிடித்துக் காத்திருக்கிற மக்களைப் பார்த்தபிறகும் கூட எவ்வாறு ஈவு இரக்கமில்லாமல் இவ்வாறு செயல்பட முடிகிறது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு சட்டத்தை உருவாக்கி மக்களின் சேமிப்பையெல்லாம் எடுத்துக்கொண்டவர்களுக்கு தேவைக்கு அதிகமான பணமும், மக்களிடமிருந்து ஊழல் செய்து திருடி கொள்ளையடித்த பணமும் எங்கெங்கே இருக்கிறது எனத்தெரியாதா? அவற்றையெல்லாம் அதே மாதிரி ஒரு சட்டம் இயற்றி பிடுங்கினால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மக்களிடமிருந்து வரி வாங்காமலேயே சிறப்பான ஆட்சி நடத்தலாமே! மக்கள் பணம் 68 ஆயிரம் கோடியை பணக்கார முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துவிட்டு அந்த கடனை ஒரே அறிவிப்பில் தள்ளுபடி செய்து அதற்கு காரணமும் கூறுபவர்களை எந்த அரசியல்வாதிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே! கல்வி செலவுக்காக சிறுமி சேர்த்து வைத்திருந்த உண்டியலை உடைத்து நன்கொடை கொடுத்ததை தலைப்புச் செய்தியாக்கி நாட்டுப்பற்றை விதைக்க முனைகின்றவர்களின் செயல்கள் எவ்வளவு அவமானத்திற்குரியவை?

வருவாய் குறைந்து விட்டதற்காக முதலில் ஆந்திர அரசு தனது ஊழியர்களுக்கு இனி பாதி தொகை மட்டுமே மாத ஊதியம் என அறிவித்தது. அதை பின்பற்றி ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களும் அறிவித்தன. ஏற்கனவே ஜிஎஸ்டி பணம் மாநிலங்களுக்கு இல்லாமல் மத்திய அரசுக்கு சென்று விட்டது. அத்துடன் மத்திய அரசு அறிவித்த குறைந்த அளவிலான கோவிட் 19 உதவித்தொகையும் கூட முறையாக இன்னும் வந்து சேரவில்லை என்பதால் தமிழக அரசு பணப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வேறு வழியில்லாத இந்த இக்கட்டான நிலையில் பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் ஊழியர்களுக்கான மாத ஊதியத் தொகையை ஏன் பாதியாக அறிவிக்க தயங்குகிறது எனபது புரியவில்லை.

தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பலதுறைகளில் பணியில் இருக்கிறார்கள். சுழற்சி முறையில் இரவு பகலாக பல துறைகள் இயங்குகின்றன. இரு பிரிவினருக்குமே ஒரே மாதிரியான ஊதியம் என்பதெல்லாம் சரியானது தானா? மொத்த வரிப்பணத்தில் முக்கால் பகுதி அரசு ஊழியர்களுக்கே ஊதியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நிலைமை சீராகும் வரைக்குமாவது ஊதியத் தொகையை வரைமுறை படுத்தினால் எவ்வளவோ தொகையை மிச்சப்படுத்தி அந்தப்பணத்தில் மக்களுக்கு இந்நேரத்தில் உதவலாமே!

இதைச் செய்யாமல் வருமானம் இல்லாததால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் எனக் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அரசு மருத்துவமனைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளை கையாளும் நிலையில் மேலும் 750 திருமணக்கூடங்கள் மருத்துவமனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம் பெறும் கடைநிலை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முதற்கொண்டு முதலமைச்சர்கள், நீதிபதிகள், ஆளுநர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் வரை அவர்களின் குடும்பங்கள் உட்பட எவருமே அரசு மருத்துவமனைகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை! ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே தான் அவைகள் என்பதால் பெயரளவிற்கு இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைய காத்திருக்கும் கொரோனா கிருமி இனி ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை. எத்தனையோ குடும்பங்களில் புதிதாக பிறந்த குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இனி மேல் அவர்களெல்லாம் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். ஏற்கனவே நம்மிடம் முறையான மருந்தும் இல்லை, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்குமே பற்றாக்குறை. இவர்களை எல்லாம் இனி எங்கே கொண்டு போய் படுக்க வைக்கப் போகிறார்கள்?

கடந்த நாட்களில் மதுக்கடைகளை மூடச் சொல்லி முதலில் அரசியல் கட்சிகள் போராடின. பின் அமைப்புகளும், இயக்கங்களும் போராடின. இறுதியாக வேறு வழியின்றி மக்களே வீதியில் இறங்கினார்கள். குடும்பம் நடத்த பணம் இன்றி, குடிநோயாளிகளாகி துன்புறுத்தும் கணவன் மற்றும் பிள்ளைகளால் பெண்களே களத்தில் இறங்கி போராடினார்கள். இனி அவர்களின் நிலை என்னவாக போகிறது? சமையல் எரிவாயு வாங்குவதற்கே அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் சரியாகிப் போனது. அரசு தந்த விலையில்லா பண்டங்கள் இந்த குடும்பங்களுக்கு எந்த மூலைக்கு எத்தனை நாட்களுக்கு உதவப்போகிறது?

வேலையிழந்து பணம் இல்லாத இந்த நடுத்தர ஏழை எளிய மக்களிடமிருந்து சுரண்டி வசம் கண்ட 30,000 கோடி தானே இப்பேர்ப்பட்ட கொலைக்கு சமமான செயலைச் செய்ய வைக்கிறது? ஏற்கனவே பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் காவல்துறை கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, விபத்துக்கள் போன்றவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை?

பசியுடன் நாட்களை கடத்த போகும் இந்த தாய்மார்களை பிள்ளைகளை முதியோர்களை குடிநோயாளிகள் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவார்கள். குடித்துவிட்டு கொரோனாவை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அதன்பிறகும் துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும், கதறும் பெண்களின் தாலிகள் மஞ்சள் கயிறாக மாறும்!

மருத்துவத்திற்கும், வாழ்க்கை நடத்தவும் மக்களை அலையவிட்டு எத்தனை பிணங்கள் ஒரு நாளைக்கு விழுகிறது. எவ்வளவு பேருக்கு நோய் பரவி இருக்கிறது என்ற செய்தியைத்தான் நாள்தோறும் ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்க போகின்றன?

எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள்! அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என அரசியல்வாதிகள் கணக்கு போடலாம். அதற்கும் மக்கள் உயிரோடு இருந்தால்தான் முடியும். ஒரு வேளை அவர்களின் கணக்கு இப்படியும் இருக்கலாம்! பதிவாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையின் வித்தியாசத்தில் தானே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லாமல் போனாலும் பரவாயில்லை. வேட்பாளர்களின் குடும்பம் மட்டுமே வாக்களித்து மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? நிதி நெருக்கடியிலுள்ள தமிழகத்தை தனிப்பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தயவு செய்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மக்களைக் காப்பாற்றுங்கள் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleடாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச்சதி!
Next articleகொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம்