தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக தமிழக அரசு இலவச மின்சாரத்தை வழங்கி உதவி செய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது மாநில அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் மத்திய அரசு செயல்படுத்த போகும் புதிய மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாயிகள் இலவச மின் திட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி தற்போது மாநில அரசால் குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும் நிறுத்தப்படும்.
ஒரு வேளை மாநில அரசு வழங்கும் இலவச மின்சாரத்தால் தற்போது பயனடைந்து வரும் இந்த பிரிவினருக்கு உதவ மாநில அரசு நினைத்தால், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான தொகையை மானியமாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம்.
மேலும் தற்போதுள்ள இந்த இலவச மின்சார திட்டத்தை அனைத்து மாநிலங்களும் வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திலாவது இதை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இச்செய்தி விவசாயிகள் மட்டுமின்றி மாநில அரசு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் பல சிறு குறு நெசவு தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.