ஒரு வினாடிக்கு ஆயிரம் HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் தொழில்நுட்ப வசதியை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீப காலங்களில் திரைத்துறையில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதே போல தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை போல வீட்டிலிருந்து படம் பார்ப்பதையும் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.மேலும் இணையதளத்தில் படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பார்க்க நிறைய இணையதளங்கள் உருவாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது வாழ்க்கை முறையில் இன்டர்நெட் என்பது மக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்டர்நெட் இல்லாவிட்டால் உலகமே இருண்டது போல ஆகிவிடும் என்று நினைக்கும் அளவிற்கு இன்டர்நெட் மக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது.
அதே நேரத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதன் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் வேகமானது ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்களை டவுன்லோட் செய்யும் அளவிற்கு அதிவேகமானது என்று கூறப்படுகிறது. மேலும் இதற்காக ஒரு விநாடிக்கு 44.2 டெராபிட்டில் இந்த இன்டர்நெட் வேகம் உருவாக்கப்பட்டு இந்த தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக கண்ணாடி சிப் ஒன்றில் வழக்கமாக 8 லேசர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் இவர்கள் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பத்தில் அந்த லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்கிற புதிய சாதனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதால் இந்த அதிவேக இன்டர்நெட் சாத்தியபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிவேக இன்டர்நெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது மெல்போர்னில் உள்ள 18 லட்சம் குடும்பங்களின் அதிவேக இணைய இணைப்புகளை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.