இந்திய ராணுவம் குறித்து தவறான தகவலை பரப்பிய சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக சீனா இந்திய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்தும் அதற்கு பாஜக தலைமையிலான மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விமர்சனம் செய்யும் வகையில் திருமாவளவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில்,டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலேஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல்,சீனாவோடுசிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்துபண்ண ‘நான்ரெடி நீங்கரெடியா’என்கிறார்?அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா?இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் ‘திரும்பிபோ’எனபதாகை பிடிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் GoBack என்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு இருக்கும் ஒரு படத்தையும் இணைத்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த பதாகை போலி என்றும்,மோடி மீதுள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்த இவரை கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று ஹச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.