அது என்ன கவரிமான் பரம்பரை? ஒரு முடி உதிர்ந்தாலும் இறந்துவிடும் இந்த கவரிமான்?

0
249
Kavari Maan Parambarai

Kavari Maan Parambarai: பொதுவாக  பல பழமொழிகளும், தத்துவங்களும் எதற்காக சொல்லப்பட்டது என்பது போய் காலப்போக்கில் அதனை தவறுதலாக புரிந்துக்கொண்டும், அதற்கான சரியான விளக்கங்களை நாம் தெரிந்துக்கொள்ளாமலும் இன்றளவும் பல பழமொழிகளையும், தத்துவங்களையும் கூறிவருகிறோம். அந்தவகையில் தமிழ் சினிமாவில் அல்லது நம் வீட்டு பெரியவர்கள் ஆமா பெரிய கவரிமான் பரம்பரை.. என்று இந்த வார்த்தையை நகைச்சுவையாக கூறி கேள்விப்பட்டிருப்போம். எதற்காக இதனை கூறுகிறார்கள் என்று பார்க்கலாம். உண்மையில் கவரிமான் என்பது என்ன? அது எங்கே உள்ளது? என்று (kavari maan parambarai endral enna) தெரிந்துக்கொள்வோம்.

கவரிமான்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

என்பது திருக்குறள் என அனைவருக்கும் தெரியும். இதில் கவரிமா என்று தான் குறிப்பிட்டிருப்பார் திருவள்ளுவர். இதன் பொருள் என்ன வென்று பார்த்தால் தன் உடம்பில் இருந்து முடி உதிர்ந்தால் உயிர் வாழாத கவரிமா போன்றவர் மானம் அழிவதை கண்டால் தம் உயிரையும் விட துணிவார்கள் என்பது பொருள்.

அப்போது கவரிமா தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விட்டுவிடுமா அப்படிப்பட்ட இனமா இந்த கவரி மான் என்றால் கிடையாது. கவரி என்பது மான் இனம் இல்லை. கவரி என்றால் மயிர் (முடி), மா என்றால் விலங்கு அதாவது மாடு.

இதனை தான் புறநானூற்றில்,  நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமயம்.. என புறநானூறு பாடல் விளக்குகிறது. அதாவது இதன் பொருளில் இமயத்தில் வாழுகின்ற கவரி என குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்போது கவரிமா என்னும் விலங்கு உடல் முழுவதும் உரோமங்களை (முடிகளை) கொண்டது. எங்கு வாழும் என்றால் இமயமலையில் இவை காணப்படுகிறது. இமயமலையின் குளிர் தாங்கும் அளவிற்கு இதற்கு முடிகள் அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் இந்த கவரிமா உடம்பில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிட்டால் எப்படி அதனால் அந்த இடத்தில் உயிர் வாழ முடியும். அதனால் தான் திருவள்ளுவர் மயிர்நீப்பின் வாழாக் கவரிமா என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது காலப்போக்கில் திரிந்து கவரிமான் என்றாகிவிட்டது.

மேலும் படிக்க: உங்கள் வீட்டில் உருளி உள்ளதா? இதன் மகத்துவம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!