மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி பறிப்பா? அடுத்தது யார்?

Photo of author

By Ammasi Manickam

தற்போது மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமனை அப்பதவியிலிருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக கே.வி.காமத் என்பவர் மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.அப்போது முன்னாள் ராணுவ அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமனை நிதியமைச்சராக நியமித்தது பாஜக அரசு.

மத்திய நிதியமைச்சராக பதவி வகிக்கும் அவர் இதுவரை இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே நிதியமைச்சராக அவரது செயல்பாடுகள் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் அவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.

எதிர்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவிலேயே அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் நிதியமைச்சருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.

This image has an empty alt attribute; its file name is 817024-nirmala-sitharaman-dna-696x392.jpg

சமீபத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இரண்டு நிதித் தொகுப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதிலும் ஏழை மக்களுக்கான எந்தவொரு நல்ல திட்டமும் இல்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நிதியமைச்சராக அவர் அலட்சியமாக அளித்த பதில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமன் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அவருக்குப் பதிலாக கே.வி.காமத் என்பவர் மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டு வரும் இந்த விவாதத்தை துவக்கி வைத்தவர் முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தான். இதை உறுதி செய்யும் வகையில் கடந்த மே 30 ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “A little birdie tells me that “cometh” the hour in North Block” என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது, ‘காமத் தான் அடுத்து நார்த் பிளாக் (நிதியமைச்சகம் அமைந்திருக்கும் அலுவலகம்) வரப் போகிறார் என்று பட்சி ஒன்று என்னிடம் சொன்னது’ என்பதே கார்த்தி சிதம்பரத்தின் அந்த ட்விட்க்கான அர்த்தம். இதை அடிப்படையாக வைத்து தான் தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தற்போது பிரிக்ஸ் வங்கியிலிருந்து ஓய்வுபெற்ற கே.வி. காமத் புதிய நிதியமைச்சராகப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

புதிய நிதியமைச்சராக பரிந்துரைக்கப்படும் கே.வி.காமத், மூத்த வங்கியாளர் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். காமத் பிரிக்ஸ் (BRICS ) அமைப்பின் (வளர்ந்து வரும் தேசிய பொருளாதாரங்களின் சங்கம்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக பதவி வகித்து வந்தார்.

நிதியமைச்சர் நிர்மலா மாற்றப்படுகிறாரா?

இந்நிலையில் கடந்த வாரம் அந்த வங்கியின் தலைவர் பதவிக் காலம் முடிந்ததையடுத்து அவர் பதவி வகித்து வந்த அந்த இடத்திற்கு, பிரேசிலின் முன்னாள் துணை பொருளாதார அமைச்சர் மார்கோஸ் பிராடோ ட்ராய்ஜோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே 11 அன்று பிரிக்ஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட காமத், அவ்வங்கியில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் பிரிக்ஸ் வங்கியின் தலைவர் பதவிக் காலம் முடிந்ததையடுத்து காமத் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

பிரதமருடன் அவர் நடத்திய இந்த சந்திப்பின் அடிப்படையில் தான் நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக, காமத் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது.