எங்களுடைய கனவு தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேர்தலில் வெல்வது எங்களுடைய கனவு இல்லை என்றும் மக்கள் சிந்தனையை வெல்வது தான் எங்களுடைய கனவு என்றும் பேசியுள்ளார்.
நாடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாக போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் சீமான் அவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்தார். இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியால் ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறமுடியவில்லை.
வெற்றி என்பது கிடைக்கவில்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் பல தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளை விட அதிக வாக்குகளை வாங்கி இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தது. இதையடுத்து நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்கழியில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் அவர்களின் சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையடுத்து பேசிய சீமான் அவர்கள் “நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாமல் போனது. இதனால் எங்களால் நாடாளுமன்றத்திற்கு சென்று பேச முடியவில்லை. இருப்பின் நாங்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை பேசி வருகிறோம்.
எங்களுடைய லட்சியம் கனவு எல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை. மக்களின் சிந்தனையை வெற்றி பெறுவது தான் எங்களுடைய கனவு லட்சியம் எல்லாம். அந்த வகையில் நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் எங்களுக்கு உயர்ந்த லட்சியமும் இருக்கின்றது. அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம்” என்று அவர் கூறினார்.